History



பாடசாலை வரலாறு

  • மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பழைய கல்முனை வீதி காத்தான்குடி 2ம் குறிச்சியில் ஹிழுறிய்யா தைக்காப் பள்ளிவாயலுக்கு அருகில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த கட்டிடங்களுடன் காட்சி தருவதே மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயம் ஆகும். 
  • பழம்பெரும் வரலாற்றை கொண்ட தனிப்பெரும் முஸ்லிம் கிராமமாகிய காத்தான்குடி நகரத்தின் பழைய கல்முனை வீதியில் அமைந்துள்ள இப்பாடசாலை 1947ம் ஆண்டு, மார்ச் 20ம் திகதி இப்பிரதேச நலன் விரும்பிகளின் முயற்சியினால் மர்ஹும் சேர் ராஸிக் பரீட் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
  • இப்பிரதேச நலன் விரும்பியான மர்ஹும் யூசுப் ஹாஜியார் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் தற்காலிகமாக ஒருவரை அதிபராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை ஆரம்பத்தில் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயரில் அமைக்கப்பட்டு பின்னர் அருகிலுள்ள பள்ளிவாயலின் பெயரைக் கொண்டதாக மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டு இன்றும் அதே பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றது.
  • மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் மிகச்சிறிய ஒரு நிலப்பரப்பில் ஒரு சில மாணவர்களையும் ஒரு தற்காலிக அதிபரையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் மாணவர் தொகை காலத்துக்குக் காலம் அதிகரித்துச் செல்ல செல்ல இதன் விஸ்தரிப்புக்காக அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான(குழந்தை உம்மா) காணியினை விலைக்கு வாங்கி நன்கொடையாக வழங்கியதோடு, இறுதியாக இரு மாடிக் கட்டிடத்திற்கான நிலமும் அருகிலுள்ள பள்ளிவாயல் நிர்வாக சபையினால் பள்ளிவாயல் பொது மக்களின் நிதிப் பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட இந்நிலம் பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. 
  • இந்நிலத்தை வழங்கிய ஓய்வு பெற்ற அதிபர் ஜனாப் MIA. கரீம் அவர்களும் இந்நிலத்தை கொள்வனவு செய்வதற்காக உழைத்த அப்போதைய நிர்வாக சபையின் ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் MI. ஆதம்லெப்பை B.A, தலைவர் ஜனாப் SM. ஆதம் லெப்பை, அல்ஹாஜ் S. அப்துல் அஸீஸ், பொருளாளர் மௌலவி அல்ஹாஜ் AM. அப்துல் காதர் J.P அவர்களும் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களும் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் MCA. ஸலாம் அவர்களும் இதில் பெரும் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆரம்பத்தில் ஒரு சில மாணவர்களையும் ஒரு தற்காலிக அதிபரையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று சுமார் 725 மாணவர்களையும் அதிபர் உட்பட 27 ஆசிரியர்களையும் கொண்ட வகை - 2 (Type-II) பாடசாலையாக விளங்குகின்றது. 
  • ஆண்டு 1 தொடக்கம் 9 வரை 19 சமாந்தர வகுப்புக்களைக் கொண்ட இப்பாடசாலையில் 40X20 அளவு கொண்ட மூன்று கட்டிடங்களும்(6 வகுப்பறைகள்) 20X25 அளவு கொண்ட ஒரு கட்டிடமும்(1 வகுப்பறை) 6 வகுப்பறைகளையும் ஒரு நூலக அறையையும் கொண்ட ஒரு இரு மாடிக் கட்டிடமும் மட்டுமேயுள்ளது. அத்தோடு பெற்றோர்களின் பங்களிப்புடன் அமைத்துக் கொடுக்கப்பட்ட மூன்று மலசலகூடங்களையே இன்றும் சுமார் 725 மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். சுமார் 30 ஆசிரியர்கள் கடமையாற்றும் இப்பாடசாலையில் ஒரே ஒரு மலசல கூடமே இவர்களின் பாவனைக்காக உள்ளது. அதிபர் காரியாலயம் இப்பாடசாலையின் களஞ்சிய அறையிலேயே இயங்குகின்றது.
  • இதன்படி 19 சமாந்தர வகுப்புக்களைக் கொண்ட இப்பாடசாலையில் 13 வகுப்பறைகள் மாத்திரமேயுள்ளது. தற்போதைய நிலைமைகளின்படி 6 வகுப்பறைகளும், ஒரு அதிபர் காரியாலயமும், மாணவர் ஒன்று கூடல் மண்டபம், விஞ்ஞான ஆய்வுகூடம், செயற்பாட்டறை, ஆசிரியர் ஓய்வறை, மலசலகூடங்கள் போன்றவை மிக அத்தியாவசியத் தேவையாக உள்ளதோடு வகுப்பறைத் தளபாடங்களும், காரியாலய உபகரணங்களும் மிக இன்றியமையாத தேவைகளாகவுள்ளது. 
  • மேலே காட்டப்பட்டவாறு தேவையாகவுள்ள 6 வகுப்பறைகளையும் தற்காலிகமாக நிவர்த்திக்கின்ற வகையில் காலாகாலமாக இப்பாடசாலையின் குறிப்பிட்ட சில வகுப்புக்கள் அருகேயுள்ள பள்ளிவாயல் மத்ரஸாக் கட்டிடத்தில் தமது கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதும் தரம் 2,3 வகுப்புக்கள் இம்மத்ரசாக் கட்டிடத்திலேயே தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதோடு பாடசாலை நூலகமும் வகுப்பறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்த முடியாதிருப்பதோடு மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைவடைந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது மட்டுமன்றி இரு சமாந்தர வகுப்புக்களை ஒன்றாக்கி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதால் ஆசிரியர்கள் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இந்நிலையில் இப்பாடசாலையின் இன்றைய முக்கிய தேவையாக வகுப்பறைகள் புதிதாக கட்டிக் கொள்வதற்கு நிலமின்மை காணப்படுவதால் இருக்கின்ற பழமை வாய்ந்த பயன்படுத்த முடியாதுள்ள கட்டிடங்களில் ஒன்றை உடைத்து அகற்றிவிட்டு அவ்விடத்தில் புதியதொரு மூன்று மாடிக் கட்டிடமொன்றை அமைக்க வேண்டியது இன்றைய மிக முக்கிய தேவையாகவுள்ளது.

பாடசாலை தோற்றப் பின்னணி


  • பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட தனிப்பெரும் முஸ்லிம் கிராமமாகிய காத்தான்குடியில் மார்க்கக்கல்வி கற்பதிலும் மார்க்க கிரியைகளை நிறைவேற்றுவதிலும் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தனர். இதன் பின்னணியிலேதான் பழைய கல்முனை வீதி 2ம் குறிச்சியில் ஹிழுறிய்யாத் தைக்கா என்ற பெயரில் மார்க்க கடமைகளை நிறைவேற்றக் கூடியதொரு வணக்கஸ்தலமாக ஹிழுறிய்யாத் தைக்கா பள்ளிவாயல் இப்பகுதியில் சிறப்புற விளங்கியது. ஊரின் தலைசிறந்த பல உலமாக்கள் இப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்ததோடு பள்ளிவாயல்களை நிருவகிப்பதிலும் இவ்வுலமாக்கள் பெரும் பங்காற்றினர். இந்த வகையில் ஹிழுறிய்யாத் தைக்கா பள்ளிவாயலையும் பல தசாப்தங்களாக உலமாக்களே நிருவகித்து வந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • மார்க்கக் கல்வியை பெறுவதிலும் மார்க்க கிரியைகளை நிறைவேற்றுவதிலும் சிறப்புற்று விளங்குவதையும் மக்கள் கல்வியில் காட்டும் ஆர்வத்தையும் கண்ட இப்பிரதேசத்தில் வாழ்ந்த அக்கால துடிப்புள்ள இளைஞர்களாக விளங்கிய மர்ஹும்களான உபைது ஹாஜியார், யாஸின் பாவா ஹாஜியார், பள்ளத்து லெப்பை சம்சுதீன் ஆலிம் போன்றவர்கள் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி கருதி ஹிழுறிய்யா சோனகர் சங்கம் அல்லது “கிஜாரத்துல் முஸ்லிம்” வாலிபர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி பிரதேச நன்மை கருதி பல செயற் திட்டங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருவதோடு “நவயுகம்” என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் நடாத்தி வந்தனர். இதன் ஒரு மைல்கல்லாகவே இப்பிரதேச மாணவர்களின் நன்மை கருதி உலகாதாயக் கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயரில் இப்பிரதேசத்தின் ஒரு பாடசாலையை நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதன் பயனாக இப்பிரதேசத்தின் தலைவராக விளங்கிய மர்ஹும் யூசுப் ஹாஜியார்(பெரிய காளக் கடை முதலாளி) அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட ஓலைக்கொட்டிலில் இப்பாடசாலை நிறுவி இதனை ஒரு அரசாங்க பாடசாலையாக பதிவு செய்யும் வரை அப்போது ஆசிரிய பயிற்சியை முடித்துக் கொண்டு வேலை கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருந்த மர்ஹும் அப்துல் காதர் என்பவரை தற்காலிக அதிபராக மேற்சொன்ன சங்க உறுப்பினர்களில் ஒருவரான சம்சுதீன் ஆலிம் அவர்களின் மகன் பதுறுதீன்(ஓய்வு பெற்ற பதுறுதீன் மாஸ்டர்) அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள்.
  • 20.03.1947ம் திகதியாகிய அன்று இப்பாடசாலையில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 75 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதே காலப்பகுதியில் காத்தான்குடி 03ம் குறிச்சியிலும் முஸ்லிம் முன்னேற்றச் சங்கம் இயங்கியதோடு இவர்களும் சமய சமூகப் பணிகளில் ஈடுபட்டதோடு “இஸ்லாமிய தாரகை” எனும் பெயரில் ஒரு பத்திரிகையையும் நடாத்தி வந்தனர்.
  • ஹிழுறிய்யா சோனகர் சங்கத்தின் பாடசாலை நிறுவுவதற்கான முயற்சியை கண்ணுற்ற முஸ்லிம் முன்னேற்றச் சங்கத்தினர் தாமும் ஒரு பாடசாலை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு 3ம் குறிச்சியில் ஒரு பாடசாலையை நிறுவினர். இதுவே இன்றைய மெத்தைப்பள்ளி வித்தியாலயமாகும்.
  • 2ம் குறிச்சியில் ஹிழ்றிய்யாத் தைக்காவுடன் இணைந்ததாக ஒரு பாடசாலையும் 3ம் குறிச்சியில் மெத்தைப் பள்ளியுடன் இணைந்ததாக ஒரு பாடசாலையும் குறிப்பிட்ட இரு சங்கத்தினர்களும் அமைத்துக் கொண்ட பின்னர் இவற்றை அரசாங்க பாடசாலையாக பதிவு செய்து கொள்வதிலும் இரு சாராரிடத்திலும் பெரும் போட்டி நிலவியது. தமக்குள் முண்டியடித்துக் கொண்ட இவர்கள் முஸ்லிம்கள் சார்பாக தேசிய அரசில் அங்கம் வகித்த மேல்மாகாண முஸ்லிம் தலைவராகிய மர்ஹும் சேர் ராஸிக் பரீட் அவர்களை 2ம் குறிச்சி ஹிழுறிய்யா சோனகர் சங்கத்தினரும் 3ம் குறிச்சி முஸ்லிம் முன்னேற்றச் சங்கத்தினர் டி.பி ஜாயா அவர்களையும் நாடினார். இதன் பயனாக முதலில் 2ம் குறிச்சி ஹிழுறிய்யா சோனகர் சங்கப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை ஹிழுறிய்யா முஸ்லிம் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. இதனை ஓர் அரசாங்க பாடசாலையாக பதிவு செய்த பின்னர் இதன் முதலாவது அதிபராக நிந்தவூரை சேர்ந்த அஹமது மாஸ்டர் என்பவர் நியமிக்கப்பட்டார். அன்றைய காலப் பகுதியில் நிந்தவூரில் வியாபாரத்தில் ஈடுபட்ட இப்பிரதேச வர்த்தகர்களின் முயற்சியினால் நிந்தவூரை சேர்ந்த மேற்படி அதிபர் இப்பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
  • இவ்வாறு இப்பாடசாலை ஓர் அரச பாடசாலையாக பதிவு செய்யப்பட்ட பின்னர் டி.பி ஜாயா அவர்களின் அயராத முயற்சியின் பயனாக 3ம் குறிச்சி முஸ்லிம் முன்னேற்றச் சங்கத்தின் பாடசாலை மெத்தைப் பள்ளி முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயரில் 1948ம் ஆண்டு அரச பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. 
  • மர்ஹும் சேர் ராஸிக் பரீட் அவர்களின் அயராத முயற்சியினால் அரச பாடசாலையாக பதிவு செய்யப்பட்ட இப்பாடசாலை 20.03.1947 ஆம் திகதியன்று அவராலேயே திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழா நிகழ்விற்கு மர்ஹும் அப்துஸ் ஸலாம் ஆலிம் அவர்கள் தலைமை தாங்க மர்ஹும் அல்ஹாஜ் அப்துல் கபூர் ஆலிம் அவர்கள் கிறாஅத் ஓதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திறப்பு விழா நிகழ்வின் சிறப்பம்சம் யாதெனில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டதாகும். ஏனெனில் காத்தான்குடியில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இப்பாடசாலை திறப்பு நிகழ்வேயாகும்.
  • இந்த வகையில் தற்போதைய மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் ஸ்தாபகராக மேலே குறிப்பிட்டவர்களில் ஒருவரான மர்ஹும் உபைது ஹாஜியார் அவர்கள் கருதப்படுகிறார்கள். இவர் இப் பிரதேசத்தில் நீண்ட காலம் வாழ்ந்ததோடு சமய சமூகப் பணிகளில் ஈடுபட்ட ஒருவராவார். தனது அந்திம காலத்தில் மேலே குறிப்பிட்ட ஹிழுறிய்யா தைக்காவில் ஐங்காலத் தொழுகை நடாத்தும் ஒரு பேஷ் இமாமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போலவே ஏனைய உறுப்பினர்களும் இப்பாடசாலையை நிறுவுவதில் தமது முழுமையான பங்களிப்பை வழங்கியவர்களாக காணப்படுகின்றனர்.


  • உபைது ஹாஜியார் அவர்களின் புகைப்படம்



அதிபர்கள்


  1. ஜனாப் MM.  அப்துல் காதர் (காத்தான்குடி) (அரச பாடசாலையாகப் பதிவு செய்யப்பட முன்னர்)
  2. ஜனாப் அஹமது மாஸ்டர் (நிந்தவூர்) (அரச பாடசாலையாகப் பதிவு செய்யப்பட முன்னர்)
  3. திரு. வீரக்கோன் (கல்லாறு)
  4. ஜனாப் KLM. இப்றாஹீம் (மருதமுனை)
  5. ஜனாப் TL. அஹமது லெப்பை (காத்தான்குடி) 1962 - 1970
  6. ஜனாப் MM. ஆதம் லெப்பை (பெரிய சேர்) 1970 - 1971
  7. ஜனாப் MM. அப்துல் காதர் (காத்தான்குடி) 1971 - 1974
  8. ஜனாப் AUM. இஸ்மாயில் (காத்தான்குடி) 1974 - 1976
  9. ஜனாப் MM. ஆதம் லெப்பை (பெரிய சேர்) 1976 - 1988
  10. ஜனாப் MM. நூர் முஹம்மது (காத்தான்குடி) 1988 - 1992
  11. ஜனாப் MM. அப்துல் ஸலாம் (காத்தான்குடி) 1992 - 2004
  12. ஜனாபா நயிமா அப்துல் ஸலாம் 2004 - 2005
  13. ஜனாப் AA. அஸீஸ் மௌலவி 2005 - 2006
  14. ஜனாப் S. அப்துல் அஸீஸ் 2006